ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து, அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம்(பிஜேடி) தலைவருமான நவீன் பட்நாயக் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரகுபர் தாஸிடம் அளித்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று(செவ்வாய்கிழமை) எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவின் முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜேடி தோல்வி அடைந்தது. இக்கட்சிக்கு இந்த தேர்தலில் 51 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளிலும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், சயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் தோல்வியை அடுத்து முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ரகுபர் தாசை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த தேர்தலில், ஆச்சரியமான விஷயமாக, பாஜகவைவிட பிஜேடி அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. பிஜேடி 40.22% வாக்குகளையும், பாஜக 40.07% வாக்குகளையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 13.26% வாக்குகளையும், அதன் கூட்டணி கட்சியான சிபிஎம் 0.37% வாக்குகளையும் பெற்றுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் பிஜேடி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 21 தொகுதிகளில் அக்கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிகபட்சமாக 45.34% வாக்குகளைப் பெற்றுள்ளது. பிஜேடி 37.53% வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 12.52% வாக்குகளையும், சிபிஎம் 0.02% வாக்குகளையும் பெற்றுள்ளன.