அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்: ஓ.பன்னீர்செல்வம்!

“அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.

‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் கழக நிறுவனர், எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.

ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தேர்தல் தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தபழனிசாமி, “இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.