நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் ஜிகே வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையும், பிரதமராக 3ஆவது முறையாக பொறுப்பேற்க இருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரவேற்று வாழ்த்துவதாக ஜிகே வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் பேராதரவைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக பா.ஜ.க 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரியது.
இந்நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க வின் சார்பில் ஏற்கனவே பிரதமராக நல்லாட்சி செய்த மோடி அவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக மோடி அவர்கள் பிரதமராக இந்திய நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, நாட்டை உலக அளவில் முன்னோக்கி கொண்டு செல்வது ஆகியவற்றிற்காக நல்ல முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். மேலும் கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் பிரதமராக மோடி அவர்கள் நாட்டு மக்கள் நலன் காக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் பொது நலன் சார்ந்து, பல்வேறு நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடினமாக உழைத்தார். அதனால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மோடி அவர்களையே மீண்டும் தலைவராக, பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக திரு. மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையும், பாரதத்தின் பிரதமராக 3ஆவது முறையாக பொறுப்பேற்க இருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரவேற்று, வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.