மூன்றாவது முறை பொறுப்பு ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி 232 இடங்களைப் பிடித்தது. கடந்த முறை பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், இம்முறை 240 இடங்களையே கைப்பற்றியுள்ளதால் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைக்கிறது பாஜக. இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவெடுத்துள்ளது. நரேந்திர மோடி பிரதமராக வரும் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் மோடிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது, அக்கூட்டணி மீதும், மோடி மீதும் நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, அதன் மூலம் வெற்றிக்கான சிறந்த அடித்தளத்தை அமைத்த மோடியின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்த மக்களுக்கு எனது நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “உலக நாடுகள் வியக்கும் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம், வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி சாதனை படைத்த மோடியின் நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி மென்மேலும் தொடர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு ஓய்வின்றி உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி. உலக அரங்கில் இந்தியாவை மேலும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.