உபியில் பாஜக தோற்க தமிழ் நாடுதான் காரணம்: தயாநிதி மாறன்!

மத்திய சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் தயாநிதி மாறன், உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்பதற்கு தமிழ்நாடு தான் காரணம் என்று கூறினார்.

லோக்சபா தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேசத்தில் அக்கட்சிக்கு பெரிய அடி கிடைத்தது. ராமர் கோவில் உள்ளிட்டவற்றை காட்டி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த பாஜகவிற்கு உத்தர பிரதேசத்தில் 37 இடங்களே கிடைத்தன. ராமர் கோவில் உள்ள அயோத்தியில் கூட பாஜக தோற்று போனது. உத்தர பிரதேசத்தில் கடந்த முறையை போல பெரிய வெற்றியை எட்டியிருந்தால் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதில் எந்த சிக்கலும் இருந்து இருக்காது. தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜகவே எதிர்பார்க்காத அளவுக்கு அங்கு பாஜகவிற்கு பின்னடவைவு ஏற்பட்டது. உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு பெரிதும் கைகொடுக்கும் மாநிலமாக இருந்துள்ளதால் இந்த லோக்சபா தேர்தல் முடிவால் பாஜக இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தோல்விக்கான காரணனங்கள் குறித்து கட்சியின் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்ததால்தான் அவர்கள் சுயமரியாதையுடன் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்று பாஜகவை கலாய்க்கும் விதமாக பேசியிருக்கிறார் மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன். சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகம்ச்சி ஒன்றில் பேசிய தயாநிதி மாறன் கூறியதாவது:-

இந்தியாவுக்கு மோடி போதும் என்று சொல்லும் அளவுக்கு சரியான தீர்ப்பினை இந்திய மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பார்த்தீர்கள் என்றால் தமிழ் நாட்டில் 40-க்கும் 40 ம் திமுக கூட்டணி ஜெயித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் முக ஸ்டாலின் தான். உத்தர பிரதேசத்தில் பாஜக 80 க்கும் 80 வந்துவிடும் என்று எல்லோரும் கணித்தார்கள். மோடி அலை அந்த அளவுக்கு உத்தர பிரதேசத்தில் வீசியதாக சொன்னார்கள். ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜக 40 இடங்கள் தான் வந்துள்ளது. ஏனைய இடங்களில் எதிர்க்கட்சி வந்துள்ளது. பாஜக ஆள்கின்ற யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசத்தில் 40 இடங்கள் பாஜகவிற்கு வரவில்லை என்றதும் வேடிக்கையாக சொன்னாராம்.. உத்தரபிரதேசத்தில் உள்ளவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார்கள்.. தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு சுயமரியாதை வந்துவிட்டது. சுயமரியாதையுடன் திரும்பி சென்ற போது நாங்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியினை எடுத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.