சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான கமல்நாத் நாடாளுமன்றத் தேர்தலின்போது மாநிலம் தழுவிய அளவில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது மகன் நகுல்நாத், கமல்நாத் ஏற்கனவே 9 முறை வெற்றிபெற்ற சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியிலும் கமல்நாத் தீவிர தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.
இந்நிலையில், டெல்லி சென்ற கமல்நாத், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கமல்நாத் கூறியதாவது:-
மத்திய பிரதேசம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, என்ன நடக்க வேண்டும் என்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு மிகவும் நல்ல ஒரு முடிவு. மோடி பேரழிவை ஏற்படுத்தி உள்ளார். மத்தியில் தற்போது அமைய இருப்பது மோடி அரசு அல்ல; தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாருடன் நான் பேசவில்லை. பாஜக அவர்களுடன் பேசி வருகிறது. நிதீஷும் சந்திரபாபு நாயுடுவும் தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என்று பாஜக நினைத்தால் அது நடக்காது. இது மோடி அரசு அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைவரும் உள்ளனர். என்டிஏவில் அனைவருக்கும் பங்கு உண்டு. மத்தியப் பிரதேச தேர்தல் தோல்வியைப் பொருத்தவரை, மாநில அரசு நிர்வாகத்தை தவறாகப் பயன்படுத்தியது, மக்களுக்கு பணம் கொடுத்தது என அனைத்தையும் பாஜக செய்தது. மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.