தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தும், அதனை பாஜகவால் வெற்றியாக மாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக 39 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக சார்பாக 23 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. சில தொகுதிகளில் 2வது இடத்திற்கு முன்னேறி இருந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜக போட்டியிட்ட 13 தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தாலும், தமிழ்நாட்டில் இம்முறை எம்பி-க்கள் இல்லை என்று பாஜக நிர்வாகிகளே சோகத்தில் உள்ளனர். வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றாலும், 2014 லோக்சபா தேர்தலை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-
கோவை லோக்சபா தொகுதியில் பாஜகவுக்கு மக்கள் கொடுத்த முடிவு வருத்தத்தை அளிக்கிறது. ஆனாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து மக்கள் பணியாற்றும் பக்குவத்தை கட்சி எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியமைத்தால் என்ன செய்வோம் என்று கூறினோமோ, அதனை நிச்சயம் கோவை தொகுதியில் நிறைவேற்றுவோம். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இது சவாலான விஷயம். இந்த சவாலை என்டிஏ கூட்டணி சாதனையாக மாற்றியுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்று எண்ணற்ற பொய் பிரச்சாரத்தை செய்தனர். அந்த பொய் பிரச்சாரத்தை கடந்து மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளன. திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் கூட அதனை எங்களால் வெற்றியாக மாற்ற முடியவில்லை என்கிற வருத்தம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.