தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக 25 கல்லூரி மாணவர்கள் லண்டன் சென்றனர்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று “நான் முதல்வன்” திட்டம். கடந்த 2022 மார்ச் மாதம் தமிழக அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது மாணவர்களுக்குத் தொழில் மேம்பாடு மற்றும் உயர்கல்வி குறித்த பயனுள்ள மற்றும் விரிவான வழிகாட்டுதலை வழங்குவதற்கான முயற்சியாகும். இதற்கிடையே தமிழக மாணவர்களுக்காக லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வாரம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஏஐ, டேட்டா சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். லண்டன் செல்லும் இந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி வரை சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.. இதற்காக நேற்று காலை இவர்கள் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர். இது தொடர்பான தகவலைப் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலினும், “சிறகுகள் விரியட்டும்! மகிழ்ச்சி” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.