3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடியிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. 240 தொகுதிகளில் வென்ற பாஜக, தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் சில முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார். ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பிரதமராக 3வது முறை பொறுப்பேற்று உள்ள மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 3வது முறையாக அலங்கரிப்பது எளிதான ஒன்றல்ல. நாட்டின் முதல் பிரதமரான நேரு மட்டும்தான் இதுவரை அப்பெருமையை பெற்றிருந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த மோடி, அந்த சாதனையை படைத்துள்ள 2-வது பிரதமர் ஆவார்.
இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்த நரேந்திர மோடி, பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில் துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் பயனாக உலகின் ஐந்தாவது பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 3வது பொருளாதார வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்த இலக்கையும் மோடி நிச்சயம் வென்றெடுப்பார்.
3வது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்கும் மோடியிடம் இருந்து தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்பட சமூக நீதி நடவடிக்கைகள், மத்திய அரசின் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவது, நீட் விலக்கு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. அதை கண்டிப்பாக மத்திய அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.