தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மக்கள் தங்கள் சமூக வலைதள பெயர்களுக்கு பின்னால் உள்ள ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியபோது சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களின் முகப்பு பெயரில் ‘மோடியின் குடும்பம்’ என்று சேர்த்திருந்தனர். தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தங்கள் பெயர்களுக்கு பின்னால் உள்ள ‘மோடியின் குடும்பம்’ என்பதை அனைவரும் நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தியா முழுவதுமுள்ள மக்கள் பலரும், தங்கள் சமூக வலைதள பக்கங்களில், என் மீதான அன்பின் அடையாளமாக , ‘மோடியின் குடும்பம்’ என்று சேர்ந்திருந்தனர். அது எனக்கு அதிக பலத்தை கொடுத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றியை வழங்கியுள்ளனர். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான தீர்ப்பையும் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடக பக்கங்களில் இருந்து ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முகப்பு பெயர்கள் மாறலாம். ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே குடும்பம் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.