நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டதில் ஈடுபட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை. ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாக சரிசெய்வதை விட நீட் தேர்வை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு கனிமொழி கூறினார்.