தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவலை மத்திய அரசு மூன்றாவது முறையாக இன்று மீண்டும் நியமித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைத்த போது முதன்முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்ற அஜித் தோவல், கடந்த 2019-ம் ஆண்டு அமைந்த பாஜக அரசிலும் தொடர்ந்தார். இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் அதே பதவியில் தொடர்கிறார். இதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக 10.06.2024 முதல், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவலை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பதவிக்காலம் முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அஜித் தோவல் பதவியில் தொடர்வார் என்றும் குறிபிடப்பட்டுள்ளது. மேலும் அவரது பதவிக் காலத்தில், முன்னுரிமை அடிப்படையில் அவரது பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் என்றும், அவரது நியமனத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியே அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.