திருப்பத்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உடனடியாக பள்ளியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.

வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த பள்ளி உள்ளது. அருகிலேயே ரயில் நிலையமும் இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இந்த பகுதி காட்சி அளிக்கும். இந்த நிலையில் தான் இந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை முதியவர் ஒருவரை தாக்கியுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முதியர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பள்ளியில் உள்ள மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்குள் இந்த சிறுத்தை எப்படி நுழைந்தது? என வனத்துறையினருக்கும் தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிறுத்தையை பிடிக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளார். பள்ளிக்குள் சிறுத்தைகள் புகுந்துள்ளதாக வெளியான செய்தியை அறிந்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி அமைந்து இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கேயும் வனப்பகுதி இல்லை. சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் தான் வனப்பகுதி உள்ளதால் இவ்வளவு தொலைவு கடந்து சிறுத்தை எப்படி வந்தது என்பது வனத்துறையினருக்கே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. வனத்துறையினரும் காவல்தூறையினரும் இணைந்து வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் சிறுத்தையை பார்க்கும் ஆவலுடன் அங்கே திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.