நீட் முறைகேடுக்கு சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பொது மருத்துவம், பல்மருத்துவம் பயில நீட் எனும் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. அதோடு மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே தான் இந்த ஆண்டுக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. மொத்தம் 557 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். அதன்பிறகு தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்தனர் .அதோடு 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே தான் வடமாநிலங்களில் சில இடங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த உத்தரவிட்டது.

இதற்கிடையே தான் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் சந்தீப் மேத்தா, விக்ரம் நாத் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‛‛சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க வேண்டும்” எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதோடு இந்த நோட்டீசுக்கான விளக்கத்தை தேசிய தேர்வு முகமை 2 வாரத்துக்குள் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜுலை 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.