எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கடிதம்!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அதேசமயம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மதுரை, தென் சென்னை, வேலூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த இடத்தில் அதிமுக 3வது இடம் பிடித்துள்ளது. தேனியில் போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2வது இடம் பிடித்தார். அங்கும் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தொடர்ச்சியாக தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் விலகினர். முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, பெங்களூர் புகழேந்தி ஆகியோர் இணைந்து, அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை தொடங்கி உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வம், நான் ஒன்றிணைய தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். அவர் வந்து இணைந்தாலும் வரவேற்போம். அனைவரும் ஒத்துழைத்தால் இணைப்பு எளிதாக முடிந்துவிடும் என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வரையும் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிகளைச் செய்வோம் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினர், 4 தலைவர்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். “மறப்போம், மன்னிப்போம் என்ற மாபெரும் தத்துவத்தை மனதில் கொண்டு ஒன்றுபட வேண்டும்” என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக நேரில் சந்திக்க விரும்புவதாகவும், அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.