17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநில முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு பாஜக விதிகளின் படி 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய ஓய்வு என்பதால் அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து அங்கு நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸை சேர்ந்த சித்தராமையா முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் எடியூரப்பாவுக்கு கட்சியில் பதவி அப்படியேதான் உள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெங்களூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது கர்நாடகாவிலும் பாஜகவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில் இந்த வழக்கை கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் எடியூரப்பா மீது புகார் கொடுத்த சிறுமியின் தாயார் நுரையீரல் புற்றுநோயால் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து எடியூரப்பாவை போக்சோவில் கைது செய்யக் கோரி சிறுமியின் சகோதரர் நீதிமன்றத்தை நாடினார். இதனால் எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது போக்சோ நீதிமன்றம். இதனால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் இருந்தது. இந்த நிலையில் எடியூரப்பாவோ டெல்லிக்கு சென்றார். இதனால் கர்நாடகா சிறப்புப் புலனாய்வு குழுவும் டெல்லி சென்றுவிட்டது. மேலும் கைது செய்ய தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு எடியூரப்பா சென்றார். இதை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 17 ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராக வேண்டும். அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் நான் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராகிறேன். நான் யார் மீதும் எந்த குற்றமும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யாரெல்லாம் எனக்கு எதிராக சதி செய்தனர் என்றெல்லாம் எனக்கு தெரியும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடியூரப்பா இன்றைய தினம் சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தற்போது கிடைத்த தகவலின்படி 3 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.