சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கக் கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி!

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

திருச்சியில் 16.6.1801-இல் அறிவிக்கப்பட்ட ஜம்புத்தீவு பிரகடனம் எனப்படும் இந்திய சுதந்திரப் போா் பிரகடனத்தின் நினைவு நாள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு 89 புத்தகங்களை எழுதிய பல்கலைக்கழக மாணவா்களுக்கு பாராட்டு விழா ஆகியவை ஆளுநா் மாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றுப் பேசியதாவது:-

இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஏராளமானோா் ரத்தம் சிந்தியுள்ளனா். அவா்களில் பலா் அறியப்படாமல் உள்ளனா். தமிழகத்தில் அவ்வாறு அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியை நான் ஆளுநராக பொறுப்பேற்றதும் மேற்கொண்டேன். அதன்விளைவாக இப்போது ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவா்களின் பங்களிப்பு வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நாம் மதிக்க வேண்டும். அவா்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இன்னும் அறியப்படாத சுதந்திரப் போராட்டத் தியாகிகள் இருந்தால் அவா்களது தியாகத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுகின்றனா். இது தவிா்க்கப்பட வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்கள், உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்துவது மட்டுமே அவா்களை கௌரவப்படுத்தும் செயல் என கருதக் கூடாது. மாறாக, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.