பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது: ஆர்.எஸ்.பாரதி!

பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது. இடைத்தேர்தலை புறக்கணிக்க ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காக திமுகவை அதிமுக குறைகூறுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் அதன் விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி அபிநயா என்பவரை களமிறக்கியுள்ளது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பண மழை பொழியும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது. தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்று கருதிதான் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வாக்குச் சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான், ஜெயலலிதா தான். அதிமுகவால் தேர்தல் நேரத்தில் நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஜெயலலிதா டான்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது நான் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தேன். அதனை மனதில் வைத்து ஆலந்தூர் நகர்மன்றத் தேர்தலில் வாக்குச் சாவடியை அதிமுகவினர் கைப்பற்றினர், அடித்து நொறுக்கினர். குறிப்பாக 20 பூத்துகளில் 2,000 ஓட்டு இருந்த வாக்குச் சாவடிகளில் 2,300 வாக்குகள் போட்டனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை. இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன்?.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும் தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பல இடங்களில் டெபாசிட் போனது. ஆகவே, இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவை குறை கூறுகிறது அதிமுக. இடைத்தேர்தலை புறக்கணிக்க ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காக திமுகவை அதிமுக குறைகூறுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்கவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.

திமுக இடைத்தேர்தலை புறக்கணித்தபோது இருந்த சூழல்கள் வேறு. தற்போதைய சூழல் என்பது வேறு. தற்போதைய சூழலில் இடைத்தேர்தலை புறக்கணித்ததற்கான காரணத்தை கூற வேண்டும். திமுக கூட்டணி பலமாக இருப்பதால் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.