பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற மன உறுத்தல் எங்களுக்கு உள்ளது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை துவரிமான் அருகே நாக தீர்த்தத்தில் உள்ள ஓடையின் குறுக்கே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது:-
அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் தேர்தலை கண்டு அஞ்சுவதில்லை. ரோபோட் போல திமுக தேர்தலுக்கு தேர்தல் புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகிறது. திமுக வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு பணத்தை வழங்குகிறது. திமுக புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தியும், ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை அடைத்து வைத்து பணம் கொடுத்தது மு.க.ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகிறார். இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா.? காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்களா.? ஜனநாயகம் நிலைக்கப் போவதில்லை என தெரிந்தே விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழகத்தில் திமுகவிற்கு செல்வாக்கு கூடியுள்ளது என்றால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இருக்க வேண்டும். திமுக கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மக்களை விலைபேசி வாங்கப்பெற்ற வெற்றியாகும்.
திமுகவுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. திமுகவின் கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இடைத்தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை.! நம்பிக்கைதான் வாழ்க்கை மக்களின் மனநிலை மாறக்கூடியது. திமுக எத்தனையோ இடைத்தேர்தல் புறக்கணித்து உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும்.
ஓபிஎஸ் அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். திமுக நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற உறுத்தல் எங்களுக்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டது என கூற முடியாது. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எந்த காலத்திலும் பாரதி ஜனதா கட்சி தமிழகத்தை ஆள முடியாது. பாஜக தமிழகத்தில் மதவாதத்தை முன் வைப்பதால் வெற்றி பெற முடியாது.
எம்ஜிஆர் போல சம்பாதித்த பணங்களை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார். நடிகர் விஜய் எனும் இளைஞர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவருடைய கொள்கை செயல்பாடுகள் தெரிய வரும். நடிகர் விஜய் அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் கனிந்து வந்தால் நல்லது தான். கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார்” என செல்லூர் ராஜு கூறினார்.