வாரணாசியில் நடைபெற்ற பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டத்தில் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ரூ. 20,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றதை அடுத்து முதல்முறையாக அங்கு சென்றார். பிரதமராக பதவியேற்றப் பிறகு 17 ஆவது தவணை பிஎம் கிஷான் சம்மன் நிதியை வெளியிடுவதற்கான கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டார். இத்திட்டத்தின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தவணையை நேரடிமுறை பணப் பரிமாற்றம் மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொணடு பிரதமர் மோடி கூறியதாவது:-
கங்கா தேவி என்னை மடியில் ஏந்திக் கொண்டது. இதனால் நான் வாரணாசியின் ஒரு பகுதியாகிவிட்டேன். வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர். ஜனநாயக நாடுகளில் 3-வது முறையாக ஒரு அரசை தேர்வு செய்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்திய மக்கள் அதை செய்துள்ளனர். பாபா விஷ்வநாத் மற்றும் கங்கா தேவி ஆசிர்வாதத்துடன், காசி மக்களின் அன்புடன், 3-வது முறையான உங்களுக்கு சேவை செய்ய நாட்டின் பிரதமராகியுள்ளேன்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது மிகப்பெரிய நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். உங்களின் நம்பிக்கை என்னுடைய மிகப்பெரிய சொத்து. இந்த நம்பிக்கை நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், கடினமாக உழைக்கவும், உங்களுக்கு சேவை செய்யவும் உத்வேகம் அளித்துள்ளது. நான் இரவு பகலாக வேலை செய்வேன். உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
முன்னேற்ற இந்தியாவின் வலிமையான தூணாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளை கருதுகிறேன். அவர்களின் அதிகாரத்துடன் எனது 3-வது வருட ஆட்சி காலத்தை தொடங்கியுள்ளேன். அரசு அமைந்த உடன் முதல் முடிவு விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்கள் தொடர்பான குறித்து எடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்டினாலும் அல்லது பிரதமர் கிசான் சம்மன் நிதியை முன்னெடுப்பதாக இருந்தாலும், இந்த முடிவுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவும்.
இன்றைய திட்டமும் வளர்ந்த இந்தியா என்ற பாதையை வலுப்படுத்தப் போகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் ரூ.20,000 கோடி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.