400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மொத்தம் 6,61,981 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதாவை 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் ஓவைசி தோற்கடித்தார். முன்னதாக மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்த நிலையில், 240 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது.
இந்த நிலையில் 400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
இந்திய மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் 240 இடங்களோடு நிறுத்தப்பட்டுவிட்டனர். ஆணவம் கொண்டவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பா.ஜ.க.வினருக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
மத்திய பிரதேசத்தின் மாண்டியா பகுதியில் 11 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மாட்டுக்கறியை கடத்தியவர்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாக மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். அவ்வாறு சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டிருந்தால், ஏன் குறிப்பிட்ட சில வீடுகள் மட்டும் இடிக்கப்படுகின்றன?
நீட் தேர்வு தற்போது வேடிக்கையாக மாறியுள்ளது. நடப்பாண்டில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 4-ந்தேதியே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து மாணவர்களின் பெற்றொர் குற்றம்சாட்டி வந்த நிலையிலும், அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.