தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டவோ, நெற்றித் திலகமிடவோ அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நீதிபதி சந்துரு குழு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மாணவர்களிடம் ஜாதிய அடையாளத்தைத் தவிர்க்க நீதிபதி சந்துருகு குழு தந்த பரிந்துரைகள் இந்து மக்களை குறிவைத்ததாகவே இருக்கிறது; இதனை தமிழ்நாடு அரசு ஏற்கவே கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஜாதிய ஆணவத்தால் கடந்த ஆண்டு பள்ளி மாணவர் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி, மத உணர்வின் அடிப்படையில் வன்முறைகள் உருவாவதைத் தடுக்கவும் நல்லிணக்கச் சூழல் உருவாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்தது. நீதிபதி சந்துரு தலைமையிலான குழு நேற்று தமது பரிந்துரைகளை முதல்வர் மு..க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கியது. அந்தப் பரிந்துரைகளில், பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஜாதி பாகுபாடு இல்லாத தலைப்புகளை உருவாக்க விரைவாக சமூக நீதி கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்; பள்ளி- கல்லூரிகளில் மாணவர்களின் இருக்கை அகர வரிசைப்படிதான் இருக்க வேண்டும்; மாற்றுத் திறனாளி மாணவர்களை மட்டும் முன்வரிசையில் அமர அனுமதிக்க வேண்டும். பள்ளிகளின் பெயர்களில் இருக்கும் ஆதி திராவிடர், கள்ளர் மீட்பு ஆகியவற்றை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே இருக்கச் செய்தல் வேண்டும்; இப்படியான பள்ளிகள் அனைத்தையுமே பள்ளி கல்வித் துறையின் கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும்; பெரும்பான்மை ஜாதியினர் உள்ள பகுதிகளில் பெரும்பான்மை ஜாதியினரையே தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் பொறுப்புகளில் நியமிக்கக் கூடாது. பள்ளிகளில் சமூக நீதி மாணவர் மன்றம் அமைக்க வேண்டும்; மாணவர்கள் ஜாதிகளை வெளிப்படுத்தும் வகைகளில் கைகளில் கயிறு கட்டவோ, நெற்றித் திலகமிடவோ அனுமதிக்கக் கூடாது; மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்த வேண்டும் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
தற்போது நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சென்னையில் இன்று பாஜக மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பேசிய எச்.ராஜா கூறுகையில், நீதிபதி சந்துரு தனிநபர் குழுவின் அறிக்கையும் பரிந்துரையும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக காழ்ப்புணர்வு நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்கிறது. நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை முழுமையாகவே தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். இந்து பெண்கள் நெற்றித் திலகம் பொட்டு வைத்துக் கொண்டு வரக் கூடாது; கோவில்களில் கட்டுகிற கயிறுகளைக் கட்டக் கூடாது என பரிந்துரைத்துள்ளனர். இது “இவாஞ்சலிகள்” (கிறிஸ்தவர்கள்) குழுவின் பரிந்துரைகள் என்பதில் சந்தேகமே இல்லை. பெருமான்மை ஜாதியைச் சேர்ந்தவர் அப்பகுதி பள்ளிகளில் ஆசிரியராக இருக்கக் கூடாது எனில் எப்படி செயல்படுத்த முடியும்? அது எப்படி பெரும்பான்மை சமுதாயத்தை ஒதுக்க முடியும்? இந்துக்களை குறிவைத்துதான் நீதிபதி சந்துரு இந்தப் பரிந்துரைகளை அளித்துள்ளார். ஆகையால்தான் நிராகரிக்க வேண்டும் என்கிறோம் என்றார்.