மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. தற்போது திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கு டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2022-ல் ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான வரிக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து மேலும் விசாரணை நடத்துவது அவசியம் என்றும், எனவே கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் அமலாக்க இயக்குநரகம் நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.
கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் ஜெயின், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். காவலை நீட்டிக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார். கெஜ்ரிவாலின் காவலை நீட்டிக்கக் கோரும் விண்ணப்பம் தகுதியற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்திவைத்தும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ஜெயின், “நீதிமன்றக் காவலை நாங்கள் எதிர்க்கிறோம். கைது நடவடிக்கையை எதிர்த்து ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது” என தெரிவித்தார்.
கெஜ்ரிவாலைத் தவிர, மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் சவுகானின் நீதிமன்றக் காவலையும் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இருவரும் திஹார் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.