தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது!

தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.

முன்னதாக பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி, 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்களவை தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், துறைகள் தோறும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

முதல் நாளான இன்று முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை தள்ளிவைக்கப்படும்.

நாளை காலை நீர்வளம், தொழிலாளர் நலத்துறை மானியகோரிக்கை, மாலையில் வீட்டுவசதி, மதுவிலக்கு – ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலம், சமூகநலத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். பேரவை கூடும் நேரத்தை காலை 9.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 முதல் 8 மணி வரை என மாற்றுவதற்கான தீர்மானம் நாளை காலை கொண்டுவந்து நிறைவேற்றப்படும். இதை பின்பற்றி, வரும் ஜூன் 29-ம் தேதி வரை காலை, மாலை இரு வேளையும் பேரவை கூட்டம் நடைபெறும்.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்தும் மாநிலம் முழுவதும் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க ஆளும் தரப்பும் தயாராகி வருகிறது.