கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையும் தொடங்கி உள்ளது. ஆனால், அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதனிடையே கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிந்தோரின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனைக்குள் பிரேமலதா நுழைந்ததுமே, மாஸ்க் அணிந்து கொண்டார்.. கலங்கிய கண்களுடன் வந்த பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடமும், நர்ஸ்களிடமும் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. டாஸ்மாக் இல்லா தமிழகத்தை உருவாக்குங்கள் என்று என்னிடம் சொல்லி சொல்ல சொல்கிறார்கள். எப்போதும் முதல் ஆளாக வரக்கூடிய முதல்வர் ஸ்டாலின் இப்போது வரை இங்கு வராமல் இருக்கிறார்.. .அதிகாரிகளை மாற்றிவிட்டால் போன உயிர்கள் எல்லாம் வந்துவிடுமா?.. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளகச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது” என்று கூறினார்.