டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 10–ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2-ம்தேதி அவரை சிறைக்கு திரும்ப உத்தரவிட்டது.

அதன்பின், மருத்துவ பரிசோதனைகளுக்காக இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதற்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் கெஜ்ரிவால் திஹார் சிறையில் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின் திஹார் சிறைக்கு சென்று கெஜ்ரிவால் ஆஜரானார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று முன்தினம் (ஜூன் 19) உத்தரவிட்டது.

விசாரணையின்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ கூறுகையில், “இந்த வழக்குடன் தொடர்புடைய அத்தனை முடிச்சுகளும் கடைசியில் கெஜ்ரிவாலிடம் வந்துதான் முடிகின்றன. முறைகேடுகளுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.100 கோடி வரை லஞ்சம் கேட்டதாக முதலில் குற்றம்சாட்டியது சிபிஐ தானே தவிர அமலாக்கத் துறை அல்ல” என்றார். இதற்கு எதிரான வாதங்களை கெஜ்ரிவால் தரப்பு முன்வைத்தது.

இந்நிலையில், டெல்லி டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் இன்று (வெள்ளிக்கிழமை) சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.