கெஜ்ரிவால் ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, இன்று கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கெஜ்ரிவால் விடுதலை ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி அரசின் மதுபானக்கொள்கை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம்தேதி அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றக்காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலுக்கு தேர்தலையொட்டி உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேநேரம் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே கெஜ்ரிவாலின் நீதிமன்றக்காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் திகார் சிறையில் இருந்தவாறே டெல்லி நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலின் நீதிமன்றக்காவலை வரும் 3 ஆம் தேதி வரை தேதி வரை நீதிமன்றம் நீட்டித்தது. அதேநேரம் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவையும் நேற்று முன்தினம் அவர் விசாரித்தார். இந்த விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது.

ஆனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார். விசாரணை முடிவில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ 1 லட்சம் தனிநபர் பத்திரத்தின் அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதேநேரம் பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி கெஜ்ரிவாலுக்கு விதித்தார். அதாவது வழக்கின் விசாரணையை சீர்குலைக்கவோ, சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்தவோ கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, தேவைப்படும் போதெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜராகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கெஜ்ரிவால் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கெஜ்ரிவாலை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால், கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தனது மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று விடுமுறைக்கால அமர்வு முன்பு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.