வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவினர் இன்று காலை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அதிமுகவினரின் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை கூடியதும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பேரவையில் பேசுவதற்கு அனுமதிக்கக்கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவு, கவன ஈர்ப்பு தீர்மானத்தைப் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், விதிகளை மீறி நடந்து கொண்டால் ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்றும் எச்சரித்தார். ஆனால் பேரவைத் தலைவரின் எச்சரிக்கையை மீறி, தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து பேரவையில் நியாயம் கிடைக்கவில்லை. பேரவைத் தலைவர் நடுநிலையாக நடக்கவில்லை” என குற்றம்சாட்டினார். பின்னர், முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, மானியக் கோரிக்கையில் பங்கேற்குமாறு பேரவைத் தலைவர் விடுத்த அழைப்பை அதிமுக நிராகரித்தது.