நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டது: ராகுல் காந்தி!

‘‘மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது, நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டதற்கு இன்னொரு உதாரணம்’’என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

தற்போது மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

பாஜக ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத் துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, தங்களது எதிர்காலத்துக்காக அரசை எதிர்த்து மாணவர்கள் போராடும் நிலை உள்ளது. போட்டி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்துள்ள நிலையில், பிரதமர் மோடி மவுனம் காப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். நரேந்திர மோடியின் செயலற்ற அரசு, மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதில் இருந்து நமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.