நிர்மலா சீதாராமனை மோசமாக திட்டிய கவிஞர் இனியவன்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தரக்குறைவாக பேசிய கவிஞர் இனியவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டு டிஜிபி அலுவலகத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக சார்பில் கடந்த ஜூன் 17-ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கவிஞர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மிக மோசமான வார்த்தைகளில் திட்டி பேசினார். எந்தத் தேர்தலிலும் நிற்காமல், மத்திய அமைச்சர் பதவியை மட்டும் வாங்கிக் கொண்டு, தமிழக எம்.பி.க்களிடம் நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பி வருவதாக குறிப்பிட்ட கவிஞர் இனியவன், சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை திட்டி இருந்தார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கேட்டு பாஜகவினர் கடுமையாக கொந்தளித்து வந்தனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது பதிவில், “பாஜக பெண் தலைவர்களை இழிவுப்படுத்தி பேசி பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டுமே திமுக மேடைகளில் இடம் கிடைக்கிறது. இந்த மோசமான அணுகுமுறை அரசாங்கத்தாலேயே ஊக்குவிக்கப்படுகிறது. இந்த அசிங்கங்களுக்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிர்மலா சீதாராமனை இழிவாக பேசிய அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. இதன்பேரில், இந்த விவகாரம் குறித்து தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு உயர் பதவியில் உள்ள நிர்மலா சீதாராமனை தரக்குறைவாக பேசிய கவிஞர் இனியவன் மீது போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கேட்டு அந்த நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.