தமிழிசை சவுந்திரராஜனின் மிக பெரிய ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி சூர்யா சிவா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அக்கா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள். கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜக கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு. புதுவை பாஜகவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜகவிலும் களம் இறங்கி அழித்துக் கொண்டிருக்கும் உங்களை மறப்பேனா? உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன். வருத்தம் வேண்டாம் அக்கா என தெரிவித்துள்ளார்.
இது போல் நேற்றைய தினம் வேறு ஒரு ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு, மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே.. Count Down Starts… என அதிர்ச்சிகரமான ட்வீட்டை போட்டிருந்தார்.
பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆண்டும் இதே போல் டெய்சி சரணுடன் திருச்சி சூர்யாவிற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கட்சியில் இருந்து 6 மாத காலம் திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். எனினும் வேறு கட்சியில் இணையாமல் அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துகளையே திருச்சி சூர்யா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு மீண்டும் இந்த பதவி வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் புதுவை துணை நிலை ஆளுநராகவும் தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசையை விமர்சித்து கடுமையாக பதிவை போட்டியிருந்தார். இதனால் திருச்சி சூர்யா தற்போது அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகும் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டுதான் தமிழக பாஜகவில் இணைந்தேன். என் மீது எடுக்கப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு எந்த வருத்தமும் இல்லை. அண்ணன் அண்ணாமலையை விமர்சித்ததால் நான் பதில் அளித்தேன். இனியும் பாஜகவில் பயணிக்க எனக்கு எண்ணம் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் மணல் மாஃபியாக்களிடம் எந்தெந்த பாஜக பிரமுகர்கள் ஆட்டையை போட்டார்கள் என்பது குறித்து விரைவில் அம்பலப்படுத்துவேன் என கூறியுள்ளார்.