திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரின் வடத்திற்கு கயிறு வாங்க முடியல.. அதிகாரிகளுக்கு சொகுசு காரா? என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் கடந்த ஜூன் 21-ம் தேதி நடந்தது மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர், உள்பட பல்வேறு பிரமுகர்கள் தேர் வடத்தை தூக்கி இழுக்க தொடங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்தது. தேர் இருப்பிடத்தை விட்டு ஒரு அடி கூட நகரும் முன்பே இந்த சம்பவம் நடைபெற்றது. 20 ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்து விழுந்ததற்கு இந்த முன்னணி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்செந்தூரில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லையப்பர் கோவிலில் தேர்வடமானது அறுந்து போயிருக்கிறது.. மூன்று வடம் அறுந்திருக்கிறது. அந்த சமயத்தில் திருச்செந்தூரில் எடுத்து சென்ற வடமும் அறுந்து போயிருக்கிறது.. வடத்திற்கு கயிறு வாங்கி போடக்கூட வக்கில்லாமல் இருக்கும் சேகர்பாபு (அலேலுயா பாபு என்று கடுமையாக பேசினார்) போன்ற நபர்கள்.. அந்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சொகுசு காரா… காரை எல்லாம் வாபஸ் வாங்குங்கள்.. வேலை செய்யாதவர்களுக்கு எதுக்குங்க சொகுசு காரு.. இந்துக்களை சுரண்டி சாப்பிடும் துறை என்றால் அது.. இந்து அறநிலையத்துறை தான்.. எந்த இஓ மீது இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தீங்க.. அந்த நெல்லையப்பர் கோவில் இஓவை முதலில் பணியிட நீக்கம் செய்திருக்க வேண்டும் அல்லவா?
கோயிலுக்குள் என்ன அர்ச்சனை பண்ண வேண்டும்.. எப்படி பண்ண வேண்டும்.. சுவாமிக்கு என்ன நெய்வேத்தியம் வைக்க வேண்டும்.. என்ன வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட இந்த விஷயத்தில் எல்லாம் அநாவசியமாக தலையிடுறீங்கல்ல.. கயிறு சரியாக உள்ளதா என்று பார்க்ககூடாதா.. ஆண்டவன் போற தேருக்கு பாதுகாப்பு இல்லை.. இந்த அதிகாரிகள் போறதுக்கு எதற்கு சொகுசு கார்.. முதலில் அதை வாபஸ் பெற வேண்டும்.. நெல்லையப்பர் கோவில் இஒக்கு இனி கார் கிடையாது.. சைக்கிளில் போங்க என்று சொல்லுங்க.. அப்ப எல்லா இஓக்களும் ஒழுங்காக செயல்படுவாங்க.. இல்லாவிட்டால் நாம் போராட வேண்டியதிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.