கென்யாவில் வரி உயர்வு மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற கட்டிடத்தை தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
கென்யாவில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களுக்கான வரியை உயர்த்தப்போவதாக அந்தநாட்டின் அரசு அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் வரி உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட இருந்தது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நிலவி வந்தது.
நேற்று கென்யா நாடாளுமன்றத்தில் வரி உயர்வு மசோதா மீது விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கே இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்தை தீ வைத்து கொளுத்தினர். இதனால் கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியாகி உள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அதேவேளை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஐ கடந்ததாகவும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் அந்த நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. போராட்டம் நடந்தபோது நாடாளுமன்றத்தில் இருந்த எம்.பிக்கள் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் பலர் பலியானதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.