நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவின் கட்சியான சமாஜ்வாதியின் எம்பி ஆர்கே சவுத்ரி சபாநாயகரிடம் பரபரப்பான கடிதம் வழங்கி உள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்து மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி 3வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட 71 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி நாடாளுமன்றத்தின் லோக்சபா கூடியது. புதிதாக தேர்வான எம்பிக்கள் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பதவியேற்றனர் . அதன்பிறகு நேற்று லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் ‛இந்தியா’ கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் எம்பி சுரேசை வீழ்த்தி பாஜக கூட்டணி வேட்பாளரான ஓம்பிர்லா வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தற்போது லோக்சபாவில் சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட்டுள்ள ‛செங்கோல்’ அகற்றப்பட வேண்டும் என்று அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஆர்கே சவுத்ரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கி உள்ளார்.
அதாவது உத்தர பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற அவர் எம்பியாக பதவியேற்றார். இதையடுத்து அவர் இடைக்கால சபாநாயகர் பத்ருஹரி மஹ்தாப்பிடம் முன்னிலையில் எம்பியாக பதவியேற்றார். பதவியேற்பிற்கு பிறகு அவர் செங்கோலை அகற்ற வேண்டும் என்று பத்ருஹரி மஹ்தாப்பிடம் வழங்கினார். எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி அங்கம் வகிக்கும் நிலையில் எம்பி ஆர்கே சவுத்ரி வழங்கி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
லோக்சபாவின் சபாநாயகர் அருகே உள்ள செங்கோலை அகற்ற வேண்டும். ஏனென்றால் நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். மாறாக அரசர் அல்லது இளவரசின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக செங்கோல் உள்ளது. இதனால் செங்கோலை அகற்றிவிட்டு அதற்கு பதில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு லோக்சபாவில் செங்கோல் நிறுவப்பட்டது. இந்த செங்கோலுக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள அதேவேளையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ரூ.971 கோடி மதிப்பீட்டில் புதிதாக நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இந்த நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு சபாநாயகர் இருக்கையின் அருகே பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை குறிக்கும் வகையில் ஆங்கிலேயரின் கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன் மூலம் முதல் பிரதமர் நேருவுக்கு இந்த செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செங்கோல் தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம் உதவியோடு சென்னையில் தயாரிக்கப்பட்டது. இந்த செங்கோலின் மேற்புறத்தில் நந்தி உருவம் உள்ளது. இந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள நேருவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை தான் பிரதமர் மோடி எடுத்து லோக்சபா சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவினார்.
லோக்சபா சபாநாயகர் இருக்கையின் அருகே செங்கோல் நிறுவ ஏற்கனவே காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் சமாஜ்வாதி எம்பி ஆர்கே சவுத்ரி சபநாயகரிடம் செங்கோலை அகற்ற வேண்டும் எனக்கூறி கடிதம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.