“நெருக்கடி நிலையை திமுக ஆதரித்ததா அல்லது எதிர்த்ததா என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்” என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 27) நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு பெற்றிருப்பது இண்டியா கூட்டணியினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. இந்த ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மக்களவையில், அவசர நிலை பிரகடனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட மவுன அஞ்சலியில் கலந்து கொள்ளாமல் திமுக, காங்கிரஸுடன் சேர்ந்து புறக்கணித்தது. எனவே, நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது திமுக ஆதரித்ததா, எதிர்த்ததா என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.
திமுக எம்பிக்கள் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்தது கேலிக் கூத்தாக உள்ளது. நாடாளுமன்ற மரபுகளை திமுக மீறுகிறது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 3-ல் ஒரு பங்கான 78 சட்டசபை தொகுதிகளில் பாஜக 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. பாஜக சார்பில் தொகுதிவாரியாக ஆய்வு நடத்தி பொதுமக்களை சந்தித்து, வாக்களித்தமைக்காக நன்றி தெரிவித்து வருகிறோம்.
எங்களுடைய முக்கிய குறிக்கோள் வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான். அதற்காக எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நேரத்தில் சரியான கூட்டணியை கட்டமைப்போம். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும். இதை சமாளிக்க திமுகவினர் பணத்தை வாரி இறைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.