நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மா பெயரில் ஒரு மரக்கன்றை கட்டாயம் நடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2014 மே மாதம் முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷனில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். மக்களவை தேர்தல் காரணமாக. சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகவில்லை. இந்த நிலையில், 3-வது முறையாக கடந்த ஜூன் 9-ம் தேதி பிரதமராக மோடிபதவியேற்றார். இதைத் தொடர்ந்துநேற்று மீண்டும் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ 111-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உலகிலேயே விலைமதிக்க முடியாத உறவு – ‘அம்மா’. தாயின் அன்பு, திருப்பி செலுத்த முடியாத கடன் ஆகும். இதை எப்படி திருப்பி செலுத்துவது என தீவிரமாக யோசித்து, இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின்போது ஓர் இயக்கம் தொடங்கினேன். ‘அம்மாவின் பெயரில் ஒரு மரம்’ என்பதுதான் இயக்கத்தின் பெயர். இதன்படி, எனது அம்மா பெயரில் ஒரு மரக்கன்று நட்டுள்ளேன். இதேபோல, நாட்டு மக்கள்அனைவரும் தங்களது அம்மா பெயரில் கட்டாயம் ஒரு மரக்கன்று நடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். இந்த இயக்கம் இப்போது வேகம் பெற்றிருக்கிறது. மரக்கன்று நடும் புகைப்படங்களை பலரும் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பெற்றெடுத்த தாய்போலேவே நம்மை கவனித்துக் கொள்ளும் பூமித் தாயையும் காக்க வேண்டியது நம் கடமை. மரம் நடும் இயக்கத்தால் நமது அம்மாவை நினைவு கூர்ந்து கவுரவப்படுத்துவதுபோல, பூமித் தாயையும் காக்கிறோம். பாரதத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வரலாறு காணாத வகையில் வனப் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமுதப் பெருவிழா காலத்தில், நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன.
கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கும் கார்த்தும்பி குடைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அவர்களை பாராட்டுகிறேன். பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு வாழ்த்துகள். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர்கள் வென்றதைவிட அதிக பதக்கங்களை இந்திய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் குவிப்பார்கள் என நம்புகிறேன்.
கடந்த ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினத்தில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அன்று சவுதி அரேபியாவில் முதல்முறையாக அல் ஹனோஃப் ஸாத் என்ற பெண், யோகாசன நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். எகிப்தில் புகைப்பட போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்கா, மியான்மர், பஹ்ரைன், பூடான் என உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகா என்பது ஒருநாள் பயிற்சி அல்ல. தினந்தோறும் யோகாசனம் செய்ய வேண்டும். இதன்மூலம் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உணர முடியும்.
குவைத் தேசிய வானொலியில் ஞாயிறுதோறும் அரைமணி நேரம் இந்தி மொழியில் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இதற்காக குவைத் அரசுக்கு நன்றி. ஆகாசவாணியில் 50 ஆண்டுகளாக நடந்துவரும் சம்ஸ்கிருத செய்தி ஒலிபரப்பு சேவை நம்மை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது. சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பு அளிப்பதுடன், அன்றாட வாழ்க்கையில் அதை இணைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூருவின் கப்பன் பூங்காவில் ஒவ்வொரு ஞாயிறும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் அனைவரும் சம்ஸ்கிருதத்தில் உரையாடுகின்றனர். இதுபோன்ற முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.
பிரதமர் பாராட்டிய அரக்கு காபி: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ஆந்திர மாநில அரக்கு காபியின் சுவை, மணத்தை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். அவர் கூறியதாவது:
இந்தியாவில் உற்பத்தியாகும் ஏராளமான தயாரிப்புகளுக்கு உலக அளவில் அதிக தேவை உள்ளது. அத்தகைய தயாரிப்புகளில் ஒன்றுதான் ஆந்திராவின் அரக்கு காபி. அதன் செழுமையான சுவை, நறுமணத்துக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. சுமார் 1.50 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. ஒருமுறை விசாகப்பட்டினம் சென்றபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து அரக்கு காபியை ருசித்தது மறக்க முடியாதது. உலக அளவில் அரக்கு காபிக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போதும் உலக தலைவர்கள் பலர் அரக்கு காபியின் சுவையை வெகுவாக புகழ்ந்தனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.