விண்வெளியில் ரஷ்யாவின் செயற்கைக்கோள் திடீரென வெடித்து சிதறியுள்ளது!

விண்வெளியில் செயல்படாமல் இருந்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் திடீரென உடைந்து சிதறியுள்ளது. அதன் சிதறிய பகுதிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை தாக்க இருந்ததால் சுனிதா வில்லியம்ஸ் உட்பட அனைத்து விஞ்ஞானிகளும் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ரஷ்யா விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் ஒன்று கடந்த 2022 ஆம் ஆண்டு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விண்வெளியில் செயலற்று சுற்றிக் கொண்டிருந்த அந்த செயற்கைக்கோள் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அருகே திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து ஆயிரக்கணக்கான துகல்கள் சிதறி, சர்வதேச விண்வெளி மையத்தை தாக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். ரஷ்ய செயற்கைக்கோள் வெடித்து சிதறியதால், மிகப்பெரிய அளவிலான குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன.

விண்வெளியில் செயற்கைக்கோளின் பாகங்கள் வெடித்து சிதறியதற்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடி அறிவிப்பு எதுவும் இல்லை. இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யாவால் கடந்த 2022-ஆம் ஆண்டு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோள் தற்போது வெடித்து ஆயிரக்கணக்கான துகல்களாக சிதறியுள்ளது.
இதன் நூற்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ரேடாரில் புலப்பட்டது. செயற்கைக்கோள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகே வெடித்ததால் அதன் துகள்கள் விண்வெளி நிலையத்தை தாக்கும் ஆபத்து ஏற்பட்டதால் விண்வெளி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனா் என தெரிவித்துள்ளனர். ஆபத்து நீங்கியதும் விஞ்ஞானிகள் மீண்டும் பணியை தொடங்கியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தற்போது விண்வெளியில்தான் உள்ளார். சுனிதா வில்லியம்ஸ் சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோருடன் கடந்த 5 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். விண்வெளியில் ஒரு வாரம் தங்கி சில பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஜூன் 14 ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் ஜூன் 26ஆம் தேதி திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சிக்கல் ஏற்பட்டதால் அவர் திரும்புவது மீண்டும் தாமதமானது. தற்போது வரை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு எப்போது திரும்புவார் என்ற தேதி உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும்போதே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.