ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த 100 சட்ட புத்தகங்கள் வெளியீடு!

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மத்திய சட்டங்கள், 63 தமிழ்நாடு சட்டங்கள் (43 மறுபதிப்பு, 20 புதிய பதிப்பு)என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சட்டத் துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் தாரணி, ஆணைய உறுப்பினர்கள் கோபி ரவிக்குமார், முகமது ஜியாபுதீன், வில்ஸ்டோ டாஸ்பின், முரளி அரூபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த 100 சட்டப் புத்தகங்களையும், தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.