உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 134 பேர் உயிரிழந்தனர். தேசிய அளவில் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சூழலில் இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது ஆளும் தரப்பை நோக்கி அவர் எழுப்பியுள்ள கேள்வியாக உள்ளது. “இந்த நாட்டில் மக்களின் உயிருக்கு அறவே மதிப்பில்லை. ஒருவர் தனது பாபா பஜாரை கட்டமைக்கிறார். அவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த போக்கு ஹாத்ரஸில் மட்டுமல்ல. நாடு முழுவதும் இதே நிலைதான். ஹரியாணாவை எடுத்துக் கொண்டால் அங்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளியாக உள்ள பாபா (சாமியார்), தனக்கு வேண்டிய நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவரை பார்த்து ஒட்டுமொத்த அரசும் வணங்குகிறது. இப்படியாக பாபாக்களின் சந்தையை நாட்டில் வளர விட்டால் இதுபோன்ற சம்பவங்களை உங்களால் எப்படி கட்டுப்படுத்த முடியும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டுள்ளார்.