நீட் தேர்வு தொடர்பாக விவாதம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

மக்களவையின் கடைசி நாளான நேற்று, நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் எழுதிய சில மணி நேரங்களில் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என காங்கிரஸ் கூறியுள்ளது.

மக்களவையின் கடைசி நாளான நேற்று, நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில் நமது மாணவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். நம்பிக்கையை மீட்டெடுக்க நாடாளுமன்ற விவாதம்தான் முதல் நடவடிக்கை. மாணவர்களின் நலன் கருதி இந்த விவாதத்துக்கு நீங்கள் தலைமை தாங்கினால் அது பொருத்தமாக இருக்கும். நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் தேவை என எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் 28-ம் தேதி வேண்டுகோள் விடுத்தன. கடந்த 1-ம் தேதியும் இதே கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அரசிடம் பேசுவதாக மக்களவை சபாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.

நீட் தேர்வு பிரச்சினைக்கு தீர்வு காண, திடமான நடவடிக்கை கோரி, இன்று மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தங்களின் எம்.பி.க்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீட்தேர்வில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். நமது உயர் கல்வி முறை நாசமாகிவிட்டதை அது காட்டியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 70 தேர்வுகளின் கேள்வித்தாள் கசிந்துள்ளது. இதனால் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமரின் உரை நேற்று முன்தினம் முடிந்ததும் மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று மக்களவையில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் எழுதிய சில மணி நேரத்தில், இந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்காக மக்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்தது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.