ஆயுர்வேதம் மற்றும் இயற்கைப் பொருட்கள் பிரிவில் பதஞ்சலியின் நற்பெயரை மக்களிடையே சேதப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று பாபா ராம்தேவ் கூறினார்.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் நேற்று கூறியதாவது:-
ஆயுர்வேத அடிப்படையில் நுகர்வோர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக பெரு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். பதஞ்சலி தேசியவாதம், சுய பெருமையை பேசுகிறது. ஆனால், அந்த கூட்டணி அதை அழிக்க விரும்புகிறது. அதனால்தான், பதஞ்சலி பிராண்ட் குறித்த தவறான தகவல்களை மக்களிடையே அவர்கள் பரப்புகின்றனர்.
குறிப்பாக, ஆயுர்வேதம் மற்றும் இயற்கைப் பொருட்கள் பிரிவில் பதஞ்சலியின் நற்பெயரை மக்களிடையே சேதப்படுத்த முயற்சிக்கின்றனர். இத்தனை தடைகளுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை-மதிப்புக்கு வலுசேர்ப்பது, விநியோகம் மற்றும் விற்பனையை அதிகரிப்பது, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, இ-காமர்ஸ் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். உயர்தரமாக்கல் என்பதுதான் இப்போதைய எங்களின் முக்கிய குறிக்கோள்.
அதன் காரணமாகவே, பதஞ்சலி வருவாய் 2023-24-ல் ரூ.31,721.35 கோடியாக அதிகரித்தது. இதில், உணவு மற்றும் எப்எம்சிஜி வணிகம் ரூ.9,643.32 கோடி பங்களிப்பை வழங்கியது. 2022-23-ல்19.49 சதவீதமாக இருந்த எப்எம்சிஜி வருவாய் 2024-ல் 30.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. எவ்வளவோ போராட்டங்கள் இருந்தபோதிலும் நாங்கள் இந்த நிலையை அடைந்துள்ளோம். அதற்கு, நுகர்வோர் எங்கள் மீதுவைத்துள்ள நம்பிக்கையே முக்கிய காரணம். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.