வங்கி ஆவணங்கள் கேட்ட செந்தில் பாலாஜி வழக்கில் ஜூலை 8-ல் உத்தரவு!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், வழக்கு தொடா்பான வங்கி ஆவணங்கள் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜூலை 8-ம் தேதி வங்கி ஆவணங்கள் தொடர்பான உத்தரவு வழங்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக செந்தில் பாலாஜியின் வழக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.