தவெக தலைவர் விஜய் ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டது விவாதமாகியுள்ள நிலையில், அதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு 2வது கட்ட பரிசளிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய விஜய், மத்திய அரசை திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அழைப்பது போல ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசினார். மேலும், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதுதான் இதற்கு காரணம் என்றும் கூறினார். நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், நீட் தேர்வில் இருந்து ஒன்றிய் அரசு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சூழலில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
மத்திய அரசு என்று சொன்னாலும் சரி, அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு என்று கூறினாலும் சரி.. மத்திய அரசானது தனது ஆக்கப்பூர்வமான பணிகளை மக்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் மேற்கொள்ள இருக்கிறது. நல்லரசாக செயல்பட்டு வரும் மத்திய அரசு, இந்தியாவை வல்லரசாக மாற்றும்.
நீட் விவகாரத்தில் திமுகவின் ஊதுகுழலாக ராகுல் காந்தி மாறியுள்ளார். திமுகவின் அழுத்தம் காரணமாக காங்கிரஸ் பேசுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உலக அளவில் இந்தியாவின் கல்வித் தரம் மிகவும் உயர்வாக உள்ளது. கல்வி தரத்தை குறைக்க, அரசியலுக்காக, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் மக்களைக் குழப்புகிறார்கள். மாணவர்களை, பெற்றோர்களை குழப்பக்கூடிய நிலையை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. இந்திய கல்வியின் மதிப்பை குறைக்க நினைக்க வேண்டாம்.
மேலும், ராணுவத்தை பற்றி விளம்பரத்திற்காக தவறாக பேசுவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேசபக்தி உள்ளவர்கள் ராணுவத்தைப் பற்றி தவறான தகவல்களை தரமாட்டார்கள். இன்று இந்தியா பொருளாதார அளவில் உயர்ந்த நாடு மட்டும் அல்ல.. உலக அளவில் பாதுகாப்பான நாடாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ராணுவம்தான். இவ்வாறு அவர் கூறினார்.