தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் (54), பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டைப் பாா்வையிட வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் அருகே சென்றதும், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பா்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் நடந்து சென்றாா்.
அப்போது 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் தடுக்க முயன்றனா். இதில் பாலாஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் தலை, கழுத்துப் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்து கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. அப்பகுதி மக்கள் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆம்ஸ்ட்ராங் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் தளப் பதிவில், “ஆம்ஸ்ட்ராங்கின் கொடூரமான படுகொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலையானது, சமூகத்தில் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரைப் புறக்கணிப்பதையும், மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.