இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை கோரி, ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால், 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் மீனவ பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. தலைவர் சகாயம் தலைமை வகித்தார். கூட்டத்தில், ‘தடைக்காலம் முடிந்து பிடித்து வரப்பட்ட இறால் மீன்களுக்கு, இதுவரை உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், படகின் உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மீன்பிடி தொழில் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவக்குடும்பங்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை ஏற்றுமதி தரம் வாய்ந்த இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீன்பிடி சார் தொழிலாளிகளும் வேலை இழந்துள்ளனர். ரூ.1 கோடி மதிப்பிலான மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் இன்று வெறிச்சோடியது.