விராட் கோலி ஹோட்டல் மீது பெங்களூர் போலீஸ் வழக்கு பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கு சொந்தமான மது அருந்தும் வசதி கொண்ட ஹோட்டல் ஒன்று பெங்களூரில் உள்ளது. அது பெங்களூரில் பிரபலமான பப் (Pub) ஆகவும் இருக்கிறது. எனவே, இரவு நேரம் வரை அது திறந்திருக்கும். நேற்று இரவு இந்த ஹோட்டலுக்கு அருகே இருப்பவர்கள் புகார் அளித்து இருக்கின்றனர். அதன் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

விராட் கோலிக்கு சொந்தமான ஒன் 8 கம்யூன் ஹோட்டல், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகிலேயே உள்ளது. அங்கு நேற்று இரவு அதிக சத்தம் வந்ததாக அருகில் குடியிருந்தவர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இதை அடுத்து காவலர்கள் இரவு 1:30 மணிக்கு அந்த இடத்துக்கு சென்று பார்த்த போது, விதியை மீறி இரவு ஒரு மணிக்கு மேலும் ஹோட்டல் செயல்பட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. பெங்களூர் நகரில் உள்ள காவல்துறை விதிகளின்படி இரவு ஒரு மணிக்கு ஹோட்டல்களை மூடிவிட வேண்டும். ஆனால், இரவு 1.30 வரை உள்ளே வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர். மேலும், அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்க விட்டு அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறை அந்த இடத்தை உடனடியாக மூடுமாறு கூறியதோடு அந்த விராட் கோலிக்கு சொந்தமான அந்த ஹோட்டலின் மீது விதிமீறலில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்துள்ளது.

விராட் கோலியின் இந்த ஹோட்டலுக்கு டெல்லி, மும்பை புனே மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன. கடந்த ஆண்டு மும்பையில் இருந்த ஒன் 8 ஹோட்டலுக்கு சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், வேட்டி, சட்டை அணிந்து வந்ததால் உள்ளே விட மாட்டோம் என கூறி வெளியே அனுப்பியது சர்ச்சையாக மாறியது. இப்போது பெங்களூரில் உள்ள அவரது ஒன் 8 கிளை விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தற்போது விராட் கோலி லண்டனில் தனது குடும்பத்தினருடன் இருக்கிறார்.