அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12-ல் நேரில் ஆஜர்படுத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

மதுபான கொள்கை வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தற்போது கைவிடப்பட்டுள்ள டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கில், அமலாக்கத் துறை 7-வது துணை குற்றப்பத்திரிக்கையை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த துணைக் குற்றப்பத்திரிக்கையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதை கவனத்தில் கொண்டு இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அதேபோல், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட எட்டாவது துணை குற்றப்பத்திரிக்கையை கவனத்தில் கொண்டு, அதில் பெயர் இடம்பெற்றுள்ள வினோத் சவுகான், அஷிஷ் மதூர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் இருவரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகும் அதே நாளில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழாவது, எட்டாவது குற்றப்பத்திரிக்கைளின் மீதான விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஜூலை 2-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத் துறை அதன் துணை குற்றப்பத்திரிக்கையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிட்டு, மதுபானக் கொள்கை குற்றச்செயல்களில் கெஜ்ரிவாலுக்கும் ஹவால ஆப்ரேட்டர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்களை உண்மை என்று நம்புவதாக கூறியுள்ளது.

அமலாக்கத் துறையின் பல்வேறு சம்மன்களை நிகராகரித்த பின்னர் கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு விசாரணையின்போது தனது மின்னணு உபகரணங்களின் கடவுச்சொல்லை பகிர மறுத்தார். இதனைத் தொடர்ந்து ஹவாலா ஆப்ரேட்டர்களின் உபகரணங்களில் இருந்து இந்த உரையாடல்கள் மீட்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.

அமலாக்கத் துறையின் குறிப்புகளின்படி, சவுகான் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கோவாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது டெல்லியில் இருந்து கோவாவுக்கு ரூ.25.5 கோடியை பரிமாற்றுவதற்கு உதவி செய்துள்ளார். மேலும் அவர், கெஜ்ரிவால் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளது. மதூர் சவுகானின் கூட்டாளி என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருத்தப்படும் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு ஜூலை 12-ம் தேதி முடிவடைகிறது. அன்று அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.