சிபிஐக்கு எதிராக மேற்கு வங்க மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கூறி ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ வழக்குகளை பதிவு செய்ய தரப்பட்ட பொது அனுமதியை அம்மாநில அரசு ரத்து செய்தது. இதன் பின்னரும் சிபிஐ வழக்குகளை பதிவு செய்வதற்கு எதிராக மேற்கு வங்க மாநில அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை அரசியல் ஆதாயத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்துகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதனையடுத்து சிபிஐ தங்களது மாநிலத்தில் வழக்குகள் பதிவு செய்யலாம் என கொடுத்திருந்த பொது அனுமதியை பல மாநிலங்கள் திரும்பப் பெற்றன. இதில் மேற்கு வங்க மாநிலமும் ஒன்று. மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கைக்குப் பின்னரும் கூட சிபிஐ அம்மாநிலத்தில் தன்னிச்சையாக வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது. இது மாநில அரசுகளின் உரிமைக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தை நாடியது மேற்கு வங்க அரசு.
அதேநேரத்தில் மத்திய அரசு தரப்பில், மேற்கு வங்க மாநில அரசின் இந்த வழக்கை விசாரணைக்கே எடுத்துக் கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது மத்திய அரசு. இருப்பினும் மேற்கு வங்க மாநில அரசின் மனு விசாரணைகு உகந்ததா என்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. ஏனெனில் மேற்கு வங்க மாநில அரசானது அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தது. இந்த பிரிவானது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பிரச்சனைகளின் போது உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்க அதிகாரம் தரக் கூடியது. ஆகையால் மேற்கு வங்க மாநில அரசின் மனு விசாரணைக்கே ஏற்றதா? இல்லையா? என்பது முதலில் விவாதிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஆர் கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது மேற்கு வங்க அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அப்போது, சிபிஐக்கு கொடுத்த அனுமதியை 2018-ம் ஆண்டே மேற்கு வங்க அரசு ரத்து செய்துவிட்டது. இதன் பின்னரும் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு அத்துமீறி தலையிடுகிறது. சிபிஐ அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது, சிபிஐ-ன் அதிகாரங்களிலோ இதர துறைகளிலோ அதன் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அதிகார வரம்பை மீறி செயல்பட்டதும் இல்லை என்றார். இந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ-ன் அத்துமீறிய தலையீட்டுக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனுவை தள்ளுபடி செய்ய முடியாது. மேற்கு வங்க மாநில அரசின் மனு விசாரணைக்கு உகந்தது. அதேநேரத்தில் எந்த அம்சங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆகஸ்ட் 13-ல் முடிவு செய்யப்படும். அதன் பின்னரே வழக்குகளின் விசாரணை தொடரும் என தெரிவித்தனர்.