இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறைகேடு வழக்கில் நேற்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில் சிபிஐ சார்பில் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு சிறிது நேரத்துக்கு முன்பு அறிக்கை தாக்கலான நிலையில் விசாரணை ஜுலை 18 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
நம் நாட்டில் மருத்துவ படிப்புக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்தது. அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சர்ச்சை கிளம்பியது. அதாவது தேர்வுக்கு முன்பாகவே நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. மேலும் 1500க்கும் அதிகமானவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதும் விவாதத்தை கிளப்பியது. அதுமட்டுமின்றி 67 பேருக்கு முழு மதிப்பெண் கொடுத்ததும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஆள்மாறாட்ட புகாரும் கிளம்பியது. இதனால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மாற்று தேதியில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் எழ தொடங்கியது. அதுமட்டுமின்றி பல இடங்களில் மாணவர்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஏராளமான மனுக்கள் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மொத்தமாக சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீட் தேர்வை ரத்து செய்தால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்படைவர்; இது அவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது. தற்போதைய நீட் தேர்வில் சிறு தவறு நடந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாளை வல்லுநர் குழு தயாரிக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக 63 புகார்கள் பெறப்பட்டு 33 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் தான் நேற்று தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை குறித்த அறிக்கை சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீலிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில் பீகாரில் ஒரு தேர்வு மையத்தில் இருந்து தான் வினாத்தாள் கசிந்துள்ளது. வினாத்தாள் வலைதளங்களில் பரவவில்லை என்பது போன்ற விபரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தேசிய தேர்வு முகமையின் பிரமாணப்பத்திரம் மற்றும் சிபிஐயின் அறிக்கை தாக்கலாகியதை தொடர்ந்து நீட் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. வழக்கு எண் நெருங்கிய நிலையில் நீட் விவகாரத்தை முதலில் நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்தார். அதன்பிறகு ஜுலை 15ல் விசாரிப்தாக தெரிவித்தார். பிறகு மீண்டும் விசாரணை தேதியை மாற்றினார். அதன்படி நீட் வழக்கை வரும் 18 ம் தேதி விசாரிக்கப உள்ளதாக கூறினார். மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.