கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து இதுவரை 66 பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு (பாமக), பாஜக சார்பில் வழக்கறிஞர் மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ-வான பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான ஸ்ரீதரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர்.
அதிமுக மற்றும் பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களுக்கு தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற்று வரும் நிலையில் சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கள்ளச் சாராயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், “அதிமுக மற்றும் பாமக தொடர்ந்த வழக்குகளில் ஏற்கெனவே பதில் மனுக்களும், அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மனுக்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவை” என்றார்.
இதையடுத்து, அனைத்து மனுதாரர்களுக்கும் இது தொடர்பான அரசின் நிலை அறிக்கை மற்றும் பதில் மனுக்களை வழங்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.